Monday, October 21, 2013


நூன்மரபு

தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் இயல் 1


நூலோர் மரபு. நூல் என்பது ஆகுபெயராய் நூலோரை உணர்த்தும்.

(அடைப்புக்குறிக்குள் உள்ளவை தொல்காப்பிய நூற்பா எணகள். அவை முதன்முதலில் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணர் குறியீட்டைப் பின்பற்றியவை.)

  • தமிழில் உள்ள எழுத்துக்கள் 30. (1) 
  • மற்றும் சார்பு-எழுத்துக்கள் 3. அவை குற்றியலிகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்பன (2). 
  • அவற்றுள் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் குறில் (3). 
  • ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்னும் ஏழும் நெடில் (4). 
  • எந்தத் தனி-எழுத்தும் 3 மாத்திரை ஒலிக்காது (5). 
  • ஒலி-நீட்டம் வேண்டின் அந்த அளவுடைய எழுத்தைக் கூட்டி எழுதிக்கொள்வர் (6). 
  • மாத்திரை என்பது (பார்த்துக்கொண்டிருக்கும்போதே) இயல்பாக இமையானது கண்ணில் நொடிக்கும் கால-அளவு (7).


  • அ முதல் ஔ வரை உள்ள 12-ம் உயிரெழுத்து (8). 
  • க முதல் ன வரை உள்ள 18-ம் மெய்யெழுத்து (9). 
  • மெய்யோடு இயைந்து அயிர்மெய்யாக மாறினும் உயிரிறுதியாகவே கொள்ளப்படும் (10). 
  • மெய்யெழுத்துக்கு மாத்திரை அரை (11). 
  • சார்பெழுத்துக்கள் மூன்றுக்கும் அரை-மாத்திரை (12). 
  • மகரக்குறுக்கம் அரை-மாத்திரையில் குறைந்து ஒலிக்கும் (13). 
  • இது உள்ளே புள்ளி வைத்து எழுதப்படும் (14). 
  • மெய்யெழுத்து புள்ளி பெறும் (15). 
  • எ, ஒ ஆகிய எழுத்துக்களும் புள்ளி பெறும் (16). 
  • புள்ளி இல்லாத மெய் அ ஒலி இயைந்து ஒலிக்கும். ஏனை உயிரோடு திரிந்த உரு கொண்டு எழுதப்பட்டு ஒலிக்கும் (17). 
  • உயிர்மெய் எழுத்தில் மெய்யெழுத்து முதலிலும் உயிரெழுத்து பின்னரும் ஒலிக்கப்படும் (18)

.
  • க, ச, ட, த, ப, ற என்பன வல்லின எழுத்துக்கள் (19). 
  • ங, ஞ, ண, ந, ம, ன என்பன மெல்லின எழுத்துக்கள் (20). 
  • ய, ர, ல, வ, ழ, ள என்பன இடையின எழுத்துக்கள் (21). 
  • இந்த மூவாறு எழுத்துக்களும் தம்மொடு தாம் மயங்கும் (22). 
  • ட, ற, ல, ள எழுத்துக்களை அடுத்து க, ச, ப என்னும் மூன்று எழுத்தும் வந்து மயங்கும் (23). 
  • அவற்றுள் ல, ள எழுத்துக்களை அடுத்து ய, வ எழுத்துக்களும் வந்து மயங்கும் (24). 
  • ங, ஞ, ண, ந, ம, ன என்னும் எழுத்துக்களை அடுத்து (நெடுங்கணக்கு வரிசையில்) அவற்றிற்கு மேலே உள்ள எழுத்துக்கள் வந்து மயங்கும் (25). 
  • அவற்றுள் ண, ன எழுத்துக்களை அடுத்து க, ச, ஞ, ப, ம, ய, வ என்னும் 7 எழுத்துக்களும் வந்து மயங்கும் (26). 
  • ஞ, ந, ம, வ என்னும் எழுத்துக்களை அடுத்து ய மயங்கும் (27).
  • ம எழுத்தை அடுத்து வ எழுத்தும் வரும் (28). 
  • ய, ர, ழ என்னும் எழுத்துக்களை அடுத்து மொழிமுதல் எழுத்துக்கள் 22-உடன் ங எழுத்தும் வந்து மயங்கும் (29). 
  • மெய்யெழுத்து அதனதன் மெய்யோடு மயங்கும் (30).


  • அ, இ, உ மூன்றும் சுட்டெழுத்து (31). 
  • ஆ, ஏ, ஒ மூன்றும் வினா-எழுத்து (32). 
  • இசை வடிவ நரம்பு மறையில் உயிர்ரெழுத்தின் மாத்திரை அளபு தன் எல்லையைக் கடந்து ஒலித்தலும், ஒற்றெழுத்தின் இசை நீடலும் நிகழும்.(33) 

No comments:

Post a Comment